Friday, February 27, 2015

சுற்றுப்புறம் காத்திடுவீர் - யாழ்மொழி

சுற்றுப்புறம் காத்திடுவீர் - யாழ்மொழி


ஆணுறையோ பெண்ணுறையோ 
அவசியமெனில் அணிந்துத் தொலையுங்கள் 
தேவை முடிந்தபின்பு - நடுத் 
தெருவில் போடாதீர்கள் 
அரும்புகளும் அதைக்கண்டு 
அர்த்தம் தேடித் தவிக்கிறது... 

மாதவிடாய் என்பது - பெண் 
மகத்துவத்தில் ஒன்றாகும் 
வீதியில் போட்டு நீங்களும் - அதனை 
விளம்பரம் செய்யாதீர் 
நெகிழிப்பையில் முடித்து 
குப்பையலிட மறவாதீர்.... 

இரவுகென்றுப் பல உடைகள் 
விருப்பம்போல் அணியுங்கள் 
ஆனால் அறிவின்றி அதனோடே 
சந்தைவரை செல்லாதீர் 
ஆடவரைத் தூண்டாதீர்.... 

பொதுக் கழிப்பிடங்கள் 
போதுமானவரை உண்டு - இனியும் 
மூச்சடைக்க வைக்காதீர் 
விளங்கினம்போல் வீதியிலே கழிக்காதீர்... 

சின்னஞ்சிறு குழந்தைகளும் 
உண்டுக் களிக்கிறது பலகாரம் 
தள்ளுவண்டித் தோழமைகளே 
கைகள் சுத்தம் செய்ய மறவாதீர் 
குழந்தைகளைப் பேணத் தவறாதீர்.... 

வீசும் குப்பைக் காற்றில் பறந்து 
வாகன ஓட்டியின் மேல் விழுந்து 
நிலைத்தடுமாறி விபத்துகளும் நிகழக்கூடும் 
குப்பைகளைத் தொட்டியில் போடப் பழகிடுவீர்... 

நன்மைக்கென்றுப் புரிந்திடுவீர் - நம் 
செல்வங்களின் நலன்கருதி நடந்திடுவீர் 
பாதிக்கப்படுவோரில் நாமும் அடக்கம் - எனவே 
சுகாதாரம் கடைபிடிப்பீர் - நம் 
சுற்றுப்புறம் காத்திடுவீர்..

தாலமரம் / பனைமரம் / கற்பக தரு

ஆயுள் குறைவது 'அரசின்' பனைமரத்துக்கு அழகா!


 

பதிவு செய்த நாள்

26பிப்
2015 
00:31
தொல்காப்பியத்தில் ஒரு பொருளை பெரிதாக சொல்வதற்கு 'பனையளவு' என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளனர். சிறிய பொருளை தினையளவு என்றும் பெரிய பொருளை பனையளவு என்றும் ஒப்பிட்டனர்.
திருவள்ளுவர் எழுதிய திருக்குறளில் முப்பாலிலும் பனை வருகிறது. அறத்துப்பாலில் 104வது குறள், பொருட்பாலில் 433வது குறள், இன்பத்துபாலில் 1282வது குறள்களில் பனை என்று வருகிறது. 'கள் உண்ணாமை' என்றொரு அதிகாரமே எழுதியுள்ளார். திருக்குறள் எழுதப்பட்டதும் பனைஓலையில் தான். மூவேந்தர்களில் சேரமன்னனின் நாணயத்தில் பனைமரம் பொறிக்கப்பட்டிருந்தது. தமிழகத்தின் அரசு மரம் பனைமரம். தொல்காப்பியத்தில் பனையை பனம்புல் என்றும் தென்னையை தென்னம்புல் என்றும் கூறியுள்ளனர். வெளியே காழ்த்து (கெட்டியாகி) உள்ளே சோறு போல மென்மையாக இருந்தால் அது புல். அதனால் பனம்புல். வெளியே மென்மையாகவும், உள்ளே வைரம் போல உறுதியாகவும் இருந்தால் அது மரம். அதனால் வேம்புவை மரம் என்கிறோம்.

ஆப்ரிக்க நுங்கு பாத்திரம்:

இலக்கிய, இலக்கணங்களில் பனைக்கு 101 பெயர்கள் உள்ளன. பனையில் மட்டும் தான் ஆண், பெண் இனங்கள் உள்ளன. ஆண் பனை அலகு விடும். பெண் பனை நுங்குவிடும். இதை பருவபனை என்பர். இந்த மரம் ஆப்ரிக்காவில் இருந்து வந்தது என்றும் சொல்வர். ஒருவேளை இது சரியாகவும் இருக்கலாம். ஒரு காலத்தில் நமது குமரிகண்டம் ஆப்ரிக்க கண்டத்துடன் ஒன்றாக தான் இருந்தது. அழிந்து போன லெமூரியா கண்டத்தில் இருந்த ஒரு நாட்டின் பெயர் ஏழ்பனை நாடு. குமரி கண்டம் மூழ்கிய போது பனை, ஆப்ரிக்க கண்டத்திற்கு சென்றிருக்கலாம். அங்குள்ள கடல்பனை 800 ஆண்டுகள் வாழும். இதன் பெரியகாயில் நுங்கை சாப்பிட்டபின் தண்ணீர் பிடித்து வைக்கும் பாத்திரமாக பயன்படுத்துகின்றனர். நம்நாட்டு பனைமரம் 120 ஆண்டுகள் வாழும். மனிதர்களை வாழ்த்துவதற்கு கூட நூறாண்டுகள் வாழ்க என்பதற்கு பதிலாக 'பனையாண்டு வாழ்க' என்று சொல்லலாம். தேவலோகத்தில் ஐந்து மரங்கள் இருந்ததாம். அதில் ஒன்று கேட்டதைத் தரும் கற்பக தரு. கடவுள், 'பனை என்ற கற்பக தருவை பூமிக்கு கொண்டு போ' என்று பிரம்மாவிடம் ஆணையிட்டதாக சொல்வதுண்டு. நம் பழந்தமிழர்களின் பெருமையைச் சொல்ல தாலியை குறிப்பிடலாம்.

தாலி வந்த கதை:

அந்தகாலத்தில் தங்கத்தில் தாலி செய்யப்படவில்லை. பனையை தாலமரம் என்பர். தால மரத்து ஓலையில் மணமகன், மணமகள் பெயரெழுதி சுருட்டி மணமகள் கழுத்தில் மணமகன் அணிவித்ததால் தான் அதற்கு தாலி என்று பெயர் வந்தது. திருமண சடங்கை பனைஓலையில் தான் எழுதினர். ஓலைச்சுருளை சுருட்டி காதணியாக அணிந்துள்ளனர். இன்றும் கன்னியாகுமரியில் திருமணத்தின் போது பனங்கம்பை நட்டு மாவிலை கட்டுவர். கன்னியாகுமரியில் காந்தி காமராஜ் அறக்கட்டளை சார்பில் கட்டப்பட்டுள்ள குமரி வரலாற்று கூடத்தின் வரவேற்பறையை பனையால் உருவாக்கியுள்ளேன். கதவு, தூண், ஜன்னல், மேஜை, நாற்காலி அனைத்தும் பனையால் ஆனது. ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நூறடி தொலைவில் இருக்கிறது இக்கூடம். வீடாக வேண்டிய பனைமரத்தை விறகாக எரிக்கின்ற நிலையில் நாம் உள்ளோம். ஏடு என்பதே பனை ஓலைக்கான பெயர் தான். என் வீட்டு திருமண அழைப்புகளில் முடிந்தவரை பனைஓலையில் தான் எழுதுகிறேன். இதை எல்லோரும் பின்பற்றினால் பனையை எந்த கொம்பனாலும் அழிக்கமுடியாது.

சுவாமிக்கு நுங்காபிஷேகம்:

சென்னை நுங்கம்பாக்கத்தில் நுங்கு அதிகமாக கிடைத்த காலம் அது. அங்குள்ள பாலசுப்ரமணியசுவாமி கோயிலில் பனம்நுங்கு அபிஷேகம் தான் செய்வர். குடிக்க பதநீர், உறிஞ்ச நுங்கு, கடிக்க பனங்கிழங்கு... இதைவிட வேறெந்த மரம் இத்தனை பயன்தரும். ஒருமுறை லண்டன் சென்ற போது பனை ஜாம் பார்த்தேன். பனையில்லாத லண்டனில் ஜாம் எப்படி என கேட்டபோது நுங்கில் இருந்து ஜாம் தயாரித்ததாக சொன்னார்கள். பனைத் தொழிலாளர் நல வாரியத் தலைவர் என்ற முறையில் பனைநுங்கு ஜாம் தயாரிப்பதற்கு தமிழகஅரசின் அனுமதி பெற்று அவற்றை தீவுத்திடல் கண்காட்சியில் விற்பனையும் செய்தது நினைவுக்கு வருகிறது.

உயரம் அதிகம்; கூலி குறைவு:

இம்மரம் 80 முதல் நூறடி உயரம் இருக்கும். பனையேறி, ஒவ்வொரு மரமாக காலையில் ஏறி பாளையை கீறி மாலையில் மீண்டும் மரம் ஏறி பதநீரை சேகரிக்க வேண்டும். ஒரு மரத்தில் மூன்று முதல் ஐந்து லிட்டர் பதநீர் கிடைக்கும். செழிப்பான பனையாக இருந்தால் 10லிட்டரும் கிடைக்கும். ஒரு மரத்திற்கு இரண்டு முறை 160 அடி வீதம் ஒருநாளைக்கு பத்து மரம் ஏறி இறங்கினால் 1600 அடி உயரம் சென்று திரும்ப வேண்டும். அதற்கான கூலி எவ்வளவு தெரியுமா. ஒருலிட்டர் பதநீர் ரூ.3.50 தான். எங்கிருந்தோ, எந்தத் தண்ணீரையோ எடுத்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் என்று ஒரு பாட்டில் ரூ.12க்கு விற்பனை செய்த காலத்தில் (2009) தமிழக அரசிடம் பதநீரின் நிலையை தெரிவித்தேன். உடனடியாக ஒருலிட்டர் பதநீரை ரூ.10 ஆக்கச் சொன்னார் அப்போதைய முதல்வர் கருணாநிதி. இப்போதும் ரூ.10ஆகத் தான் இருக்கிறது.

பயன்தரும் பனை:

பதநீரில் நிறைய நன்மைகள் உள்ளன. இருதயத்தை வலுப்படுத்துவதற்கான தயாமின் உள்ளது. கண்நோய் வராமல் காக்கிறது. எலும்பு, நரம்புகளை வலுப்படுத்தும் மருந்தாக உள்ளது. பாலில் சீனி கலப்பதற்கு பதிலாக கருப்புகட்டி(கருப்பட்டி) கலந்து குழந்தைகளுக்கு கொடுத்தால் ரத்தசோகை வராது. படிக்க நல் ஏடாகிறது; படுக்க நல் பாயாகிறது; பசிக்கு நல் உணவாகிறது. இத்தனையும் தரும் இந்த செல்வத்தை வெட்டி அழித்துக் கொண்டிருக்கிறோம். தமிழக அரசின் அரசு மரத்திற்கு அதற்குரிய கவுரவத்தையும், மரியாதையையும் தருவது நம் கடமை, அரசின் கடமை.

- முனைவர் குமரி அனந்தன், முன்னாள் தலைவர், பனைத்தொழிலாளர் நல வாரியம், சென்னை. 93821 55772. இமெயில் dr.kumariananthan@gmail.com

பெடல் சைக்கிள்

காரை விட வேகமாக செல்லும் பெடல் பொருந்திய சைக்கிள் அறிமுகம்

கருத்துகள்


காரை விட மிக வேகமாக செல்லும் பெடல் பொருந்திய பைக்கை மிநீயாபொலிஸ் சார்ந்த ரிச் க்ரான்ஃபில்ட் என்ற கண்டுபிடிப்பாளர் வடிவமைத்துள்ளார். இந்த 'ரஹ்ட் ரேசர்' வீலோமொபைல் 100mph (160 கிமீ / மணி) வரை பயணிக்கக்கூடியது. ரஹ்ட் ரேசர் என்பது ஆற்றல் பொருந்திய சைக்கிள் ஆகும், இது மிதி-மின்னாற்றல் கலப்பின தொழில்நுட்பம் மூலம் பெடலில் சக்தியை பெருக்குகிறது, நெடுஞ்சாலை வேகத்தில் வாகனம் முன்னோக்கி செல்ல ஓட்டுனர் கால்களின் மூலம் பெடலை மிதித்து ஓட்டவேண்டும்.

இதனால் சவாரி செய்பவர்களுக்கு சூப்பர் வலிமை உணர்வை கொடுக்கும் என்று திரு க்ரான்ஃபில்ட் கூறியுள்ளார். பாரம்பரிய வாகனத்தில் நேரடியாக சக்கரங்களை ஓட்டுவதை விட மாறாக, ரஹ்ட் ரேசர் வாகனத்தில் உள்ள பெடல்களில் ஒரு தனிப்பட்ட சக்கரத்துடன் கூடிய ஜெனரேட்டர் இணைக்கப்பட்டருக்கும். பின்புற சக்கரத்தின் மையத்தில் உள்ள மின் மோட்டார், பெடலிற்கு 20kWh சக்தியை கொடுக்கிறது. இரண்டிருக்கைகள் கொண்ட ரஹ்ட் ரேசர் உடல் கார்பன் ஃபைபரால் செய்யப்பட்டது மற்றும் ஒரு ரோல் கூண்டு, ஹெட்லைட்கள், இருக்கை விளக்குகள், காற்று பைகள் மற்றும் ஒரு உடற்பகுதி ஆகியவை அடங்கும்.

பெடலிங் செய்யும்போது, 570lb (259kg) வரம்பை நீட்டிக்க உதவும் 2-kWh லி-அயன் பேட்டரி பேக் சார்ஜ் செய்யப்படும். இலக்கின் வேகத்தை அடையும் நிலையை அமைத்து செயல்படுத்தப்படுகிற போது, பேட்டரி சக்தியை பயன்படுத்தி, சுமார் 50 மைல் (80 கிமீ) மற்றும் 100 மைல் (160 கி.மீ / ம) மேல் வேகம் வரை செல்ல முடியும். இதனுடைய விளம்பரம் வெற்றிகரமாக இருந்தால் ரஹ்ட் ரேசர் விலை $35,000 (£ 22,800), வரை தொடங்கும் என்று மதிப்பிடப்படுகிறது.

Thursday, February 26, 2015

மரத்தை வெட்டினால் மனிதன் சாவான்

மரத்தை வெட்டினால் மனிதன் சாவான்..!
-----------------------------------------------------------------
அரசமரத்தை வெட்டுவதோ அதன்மீது ஏறுவதோ பெரிய பாவம் என்று என்தகப்பனார் அடிக்கடி சொல்வார் எதற்காக என்று காரணம் கேட்டால் அவருக்கு சொல்ல தெரியாது. பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் அதை ஏன் எதற்கு என்று காரணம் கேட்காமல் பின்பற்ற வேண்டியது நமது வேலை அதைமட்டும் ஒழுங்காக செய்தால் எந்த பிரச்சனையும் வராது எனவே காரணம் கேட்காதே என்று கூறிவிடுவார். என் தகப்பனார் அப்படி சொல்வது சரியா? தவறா? என்பதை பற்றி நான் கேட்கவில்லை. உண்மையாகவே அரசமரத்தை வெட்டினால் பாவம் ஏற்படுமா? அதைமட்டும் தெளிவாக சொல்லுங்கள். பலருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
சிவபெருமானுடைய வியர்வை துளியிலிருந்து தோன்றியது “ருத்ராட்சம்” என்று சொல்வார்கள் அதே போல நாராயணனின் வலது கண்ணிலிருந்து தோன்றியது அரசமரம் என்ற ஐதீகம் காலகாலமாக இருந்துவருகிறது. மற்ற மதங்களிலிருந்து இந்துமதம் சிறப்பான முறையில் தனிப்பட்டு திகழ்வதற்கு இந்த உலகில் உள்ள அனைத்து பொருள்களுமே இறைவனின் அம்சம் அல்லது இறைவனோடு ஏதாவது ஒருவகையில் மிக நெருங்கிய தொடர்பு கொண்டது என்று கூறுவதில் தான் அடங்கி இருக்கிறது.
மரம் என்பது ஒற்றை அறிவுடையது அதை போய் இறைவனோடு சம்பந்தபடுத்தலாமா? இது இறைவனை இழிவுபடுத்துவதாக ஆகாதா? என்று சிலர் நினைக்கலாம். இதே மாதிரியான நினைப்புகள் மனித ஜாதியின் மனதில் எப்போது தோன்ற ஆரம்பித்ததோ அப்போதே இந்த உலகம் கெட்டுப்போக துவங்கிவிட்டது எனலாம். மண்ணும் கல்லும் இறைவனாகுமா? இது தவறான சென்டிமென்ட் என்று கருதியதனால் நிகழ்ந்தது என்ன?
இந்த கேள்விக்கு நல்ல பதிலை தருவது சீனநாட்டின் இப்போதைய இயற்கை நிலவரமாகும். அங்கு தெய்வத்தோடு சம்பந்தபட்டிருந்த அனைத்தும் பொதுவுடைமை பெயரால் நாட்டு வளர்ச்சி என்ற போலிக்காரணங்களால் சூறையாடப்பட்டன. அதன் விளைவாக சீனாவின் சுற்றுச்சூழல் சீர்கெட்டு சமப்பாடு இழந்து, இன்று அபாயகரமான நிலைக்கு வந்துவிட்டது. நமது நாடும் இப்போது ஏறக்குறைய அதே பாதையை நோக்கி மிக வேகமாக நடைபோட்டு கொண்டிருக்கிறது.
வேப்பமரத்தில் மாரியம்மன் இருப்பதும், வில்வமரத்தில் சிவபெருமான் இருப்பதும், துளசியில் உள்ளங்களை கொள்ளை கொள்ளும் கண்ணபெருமான் சிரிப்பதும், வெறும் புராணக்கதைகள் அல்ல. அதில் மிகு ஆழமான சுற்றுச்சூழல் விழிப்புணர்வு இருக்கிறது ஆயிரம் சட்டங்கள் ஏற்படுத்தாத ஒழுங்கை ஒரு சிறிய மத நம்பிக்கை ஏற்படுத்திவிடும் என்பதை போல கடவுளோடு சம்பந்தபடுத்தபட்ட மரங்களும் அழிவிலிருந்து தப்பித்து வந்தன இன்று பகுத்தறிவு வளர்ந்து போனதனால் வாழ்க்கைக்கு தேவையான அறிவு நசிந்துகொண்டே வருகிறது.
அரசமரத்திற்கு வடமொழியில் “அஸ்வத்தா” என்றொரு பெயரும் உண்டு. அஸ்வத்தா என்றால் நம்பிக்கையோடு வழிபடுபவர்களின் பாவங்களை போக்குபவள் என்பது பொருளாகும். தமிழில் உள்ள “திருமுட்ட புராணம்” என்ற நூல் அரசமரத்தை வெட்டுவதனால் துர்மரணம் வறுமை தீராத பிணி போன்றவைகள் ஏற்படுவதாக கூறி எச்சரிக்கை செய்கிறது.
மரங்கள் என்பது பூமியின் இடப்பரப்பை அடைத்துக்கொள்ள படைக்கப்பட்ட தேவையற்ற பொருள் அல்ல. மரம் என்பது பூமிக்கு இறைவனால் கொடுக்கப்பட்ட வரம் மட்டுமல்ல மனிதனுக்கும் உயிர்வாழ கொடுக்கப்பட்ட கொடையும் ஆகும். அந்த மரங்களை அழித்தால் கண்டிப்பாக மனிதர்கள் அழிய வேண்டியது தான். அதனால் தான் நமது பெரியவர்கள் அரசமரத்தை வெட்டினாலும் அவமரியாதை செய்தாலும் பாவம் என்று சொன்னார்கள்.


Wednesday, February 25, 2015

மொபைல் போன்

மொபைல் போன் வெடித்து சிதறாமல் இருக்க என்ன செய்ய வேண்டும் 
சமீப காலங்களாக மொபைல் போன் வெடித்து சிதறுவது வாடிக்கையாக அரங்கேறி வருகின்றது. உலகம் முழுவதும் பலரது மொபைல் போன்கள் வெடிக்கின்றது, சில இடங்களில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கும் அதிகளவு காயங்கள் ஏற்படுகின்றன. மொபைல் போன்கள் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்

பேட்டரி எப்பொழுதும் ஒரிஜினல் பேட்டரிக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

சார்ஜர் மொபைல் போன் சார்ஜரும் ஒரிஜினலாக தான் இருக்க வேண்டும், போலி மொபைல் சார்ஜர்கள் போனிற்கு அதிகளவில் மின்சாரத்தை செலுத்தும் இதனால் சில சமயங்ளில் போன் வெடிக்கும்.

மொபைல் போன் மொபைல் போன், பேட்டரி மற்றும் சார்ஜர் என அனைத்தும் ஒரே நிறுவனத்தை சேர்ந்ததாக இருக்க வேண்டும்.

சார்ஜ் போன் சார்ஜரில் இருக்கும் போது அழைப்புகளை மேற்கொள்ள கூடாது.

ஈரம் போன் ஈரமாக இருக்கும் போது உடனடியாக சார்ஜ் செய்ய கூடாது

பேட்டரி பேட்டரி சேதமடைந்தால் உடனடியாக அதனை மாற்ற வேண்டும்.

சார்ஜ் போன் பேட்டரி சார்ஜ் செய்து முடித்த பின் உடனடியாக போனினை சார்ஜரில் இருந்து எடுத்து விட வேண்டும்.

சூடு பேட்டரி அதிகளவு சூடாக அனுமதிக்காதீர்கள்

பேட்டரி அதிக பட்சம் போன்கள் வெட்த்து சிதற காரணமாக இருப்பது போலி நிறுவனங்களின் கருவிகள் தான், முடிந்த வரை அவற்றை பயன்படுத்தாமல் இருப்பது நல்லது. 

Tuesday, February 24, 2015

தேன்

கடைகளில் தேன்,காத்திருக்கும் ஆபத்து
‪#‎அதிர்ச்சியூட்டும்_உண்மைசெய்தி‬-பகிர்ந்து தடுப்போம் முடிந்தால் 
\விழிப்புணர்வு கொடுப்போம்
இந்தியர்களின் உயிரை பற்றி எங்களுக்கு கவலை இல்லை...
இப்படி கூறுவது அமெரிக்காவோ, சீனாவோ, பாகிஸ்தானோ அல்ல... 
நம்மை ஆளும் மத்திய அரசுதான். என்ன அதிர்ச்சியா இருக்கா ? 
அதைவிட பெரிய அதிர்ச்சி நம்ம உடலுக்கு நல்லது என்று நாம் விரும்பி 
சாப்பிடும் தேனால்தான் பெரிய ஆபத்தே இருக்கு.
டெல்லியில் இருந்து செயல்படும் அறிவியல் ம
ற்றும் சுற்றுச்சுழல் 

மையம் சமீபத்தில் நமது நாட்டில் விற்கப்படும் 
12 பிரபல நிறுவனங்களின் தேன்களை ஆய்வு செய்தது. அது என்னென்ன 
நிறுவனங்கள் என்று முதலில் பார்ப்போம்.
டாபர் (Dabur),
பைதியான்ந் (Baidyanth),
பதஞ்சலி ஆயுர்வேதா (Patanjali Ayurveda),
காதி(Khadi) மற்றும்
ஹிமாலாயா (Himalaya) 

உள்ளிட்ட நிறுவனங்கள்தான். 
இந்த நிறுவனங்கள் சார்பில் விற்கப்படும் தேன் பாட்டீல்களில் தடை 
செய்யப்பட்ட ஆன்டி பயாடிக் எனப்படும் குளோரோபெனிகல், சிப்ரோ 
பிளாக்சின் மற்றும் எரித்ரோமைசின் போன்றவற்றின் குண நலன்கள் 
அதிகளவில் காணப்படுகின்றன என அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது. 
இந்த வகை ஆன்டி பயாடிக்கினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படும் என 
மருத்துவ நிபுணர் சத்யா அச்சத்துடன் எச்சரிக்கிறார்.

இதனால்தான் இந்திய வகை தேன்களை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி 
செய்ய தடை உள்ளதாகவும், சர்வதேச தரத்திற்கு இந்திய 
நிறுவனங்களின் தேன்கள் இல்லை என்றும் அறிவியல் மற்றும் 
சுற்றுபுறத்துறை மையத்தின் துணை இயக்குனர் சந்திர பூஷன் 
ஆதாரத்துடன் தெரிவிக்கிறார்.
ஆஸ்திரேலியா மற்றும் சுவிட்சர்லாந்து நாட்டில் இருந்து இந்தியாவில் 
இறக்குமதி செய்யப்படும் 2 நிறுவனங்களின் தேனிலும் இதுபோன்று 
மனித உடலை பாதிக்கும் வகையில் உள்ளது என்றும், அதனை 
அந்நாட்டு 
அரசே தடை செய்துள்ளது என்றும், ஆனால் அவை சர்வசாதரணமாக 
இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது என்றும் அவர் கவலையுடன் 
கூறுகிறார்.
இப்பிரச்சினை குறித்து மேலே குறிப்பிட்டுள்ள நிறுவனங்களிடம் எடுத்து 

கூறியபோது, நாங்கள் தேனை தயாரிப்பதில்லை என்றும், அதனை  
வெளி 

மார்க்கெட்டில் வாங்கி எங்களது நிறுவனங்களின் ஸ்டிக்கரை மட்டும் 

ஒட்டி விற்பனை செய்வதாக அந்நிறுவனங்களின் அதிகாரிகள் 
தங்களிடம் அலட்சியமாக தெரிவிக்கின்றனர் என்று அறிவியல் மற்றும் 
சுற்றுச்சூழல் மையத்தின் இயக்குனர் சுனிதா நரேன் கூறினார்.

இந்த தகவல் எல்லாம் மத்திய அரசுக்கு தெரியும் என்றும் அவர் குற்றம் 
சாட்டுகிறார். இதனால்தான் மேலே கூறியபடி இந்திய உயிர்களை பற்றி 
மத்திய அரசுக்கு கவலை இல்லை என்று நாம் ஆணித்தரமாக 
கூறினோம். சரி இவர் எப்படி ஆணித்தரமாக மத்திய அரசுக்கு தெரியும் 
என்று கூறுகிறார் என பார்ப்போம்.

கடந்த 5 ஆண்டுகளாக இந்திய தேன்கள் சர்வதேச தரத்திற்கு இல்லை 
என ஏற்றுமதி நிறுவன ஆய்வில் கூறப்பட்டுள்ளது என்றும் ஆனால் 
அதனை பற்றி மத்திய அரசு சிறிதும் கவலைப்படவில்லை என்றும் 
சுனிதா நரேன் தெரிவித்துள்ளார். ஆனால் இவைகளை உள்ளூர் 
சந்தையில் விற்க மட்டும் மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என அவர் 
வருத்தத்துடன் தெரிவிக்கிறார்.

இந்தாண்டு ஜூன் மாதத்தில் இருந்து ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகளில் 
உள்ள 27 நாடுகளும் இந்திய வகை தேன்களுக்கு தடை விதித்துள்ளன. 
ஆனால் இந்தியாவில்...? எதை நம்பி வாங்குவது எதை சாப்பிடுவது என்ற 
குழப்பத்தில் ஆழ்ந்துள்ள மக்களுக்கு பதில் அளிக்குமா மத்திய அரசு ? 
பொறுத்திருந்து பார்ப்போம்.
உடலுக்கு ஆபத்தை விளைவிக்கும் என தெரிந்தே இத்தகைய 
பொருட்களை தடைசெய்யாமல் விற்க மத்திய,மாநில அரசுகள் 
அனுமதிப்பது ஏன்
மக்களாட்சி நடக்கும் நாட்டில் மக்களின் நலன் மீது அக்கறை இல்லாமல் 
இருப்பதேன்
நாம் சற்றே விழிப்புணர்வோடு இருந்து கொள்ள வேண்டியது நம் கடமை 

பகிர்ந்து தெரியப்படுத்துங்கள்

இதுபோல் கடைகளில் கிடைக்கும் தேன் பாட்டில்களை வாங்காமல் 
முடிந்தளவு இயற்கை முறையில் கிடைக்கும் தேனை பயன்படுத்த 
முயற்சிசெய்வோம்.

Tuesday, February 17, 2015

சோலார் பம்பு செட்

சோலார் பம்பு செட் அமைக்க தமிழக அரசு 80% 
மானியம்!!!-விவசாயிகளுக்கு தெரிய 
படுத்துங்கள் நண்பர்களே!!!

சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ள விரும்பும் விவசாயிகளுக்கு தமிழக அரசு மானியம் அளிக்க முடிவெடுத்துள்ளது. தங்களது நிலங்களில் உள்ள ஆழதுளை கிணறுகளிலிருந்து நீர் இறைக்க தற்போது மின்சாரத்தையே நம்பி இருக்கும் விவசாயிகள் இந்த திட்டத்திற்கு மாறிக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.

இந்த திட்டத்தின் மூலம் சோலார் பம்பு செட் அமைத்துக் கொள்ளும் விவசாயிகளுக்கு 80 சதவிகிதம் மானியம் வழங்கப்படும். 20 சதவிகித தொகையை மட்டும் விவசாயி தனது பங்களிப்பாக செலுத்தினால் போதும்.

ஆழ்துளை கிணறுகள் மற்றும் திறந்த வெளி கிணறுகள் வைத்துள்ள விவசாயிகள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். ஆழ்துளை கிணற்றில் அமைக்க ரூ.4,39,950, திறந்த வெளி கிணற்றில் அமைத்துக் கொள்ள ரூ.5,01,512 எனவும் விலை நிர்ணயித்துள்ளது. இந்த தொகையில் 20 சதவிகிதம் மட்டும் விவசாயிகள் கட்டினால் போதுமானது.
தவிர இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறும் விவசாயிகள் சொட்டுநீர் பாசனம, தெளிப்பு நீர் பாசனம் என்கிற முறைகளை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதற்கு ஏற்கனவே அரசு மானியம் அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பயன்பெற விரும்பும் விவசாயிகள் அதற்கான ஆதாரங்களுடன் வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை, அல்லது வேளாண்மை பொறியியல் துறை அலுவலகங்களை அணுக வேண்டும். அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து அனுமதி அளிப்பார்கள் என தெரிவிக்கபட்டுள்ளது. மின்வெட்டு பிரச்னையிலிருந்து இனி விவசாயயிகளுக்கு விடுதலைதான்.

கூடுதல் தகவல்களுக்கு:
Agricultural Engineering Department,
487, Anna Salai, Nandanam,
Chennai - 600 035.
Phone - 044 - 2435 2686, 044- 2435 2622
email : aedce.tn@nic.in